×

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையிலான திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பணியை தொடங்கியது

*வர்த்தகர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் மனு

தூத்துக்குடி : திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, நேற்று தூத்துக்குடியில் கருத்து கேட்பு பணியை தொடங்கியது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்வமுடன் மனுக்களை அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவில் திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன், சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கேஆர்என் ராஜேஸ்குமார் எம்பி, மாணவரணி செயலாளர் சிவிஎம் எழிலரசன் எம்எல்ஏ, அயலக அணி செயலாளர் எம்எம்.அப்துல்லா எம்பி, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்தக் குழுவினர் மாநிலம் முழுவதும் சென்று பொதுமக்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர். அதன்படி இக்குழுவினர், முதன்முதலாக தூத்துக்குடியில் நேற்று தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை மனுக்களாக பெற்றனர். இதில் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னை மேயர் பிரியா தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான், சில நிமிடங்கள் குழுவினரை சந்தித்து விட்டுச் சென்றார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர்களாக உள்ள அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்பட பலரும் பங்கேற்றனர்.

மனு அளித்த வர்த்தக சங்கத்தினர், துறைமுக தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு தூத்துக்குடி வெளித்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட தடைகளை அகற்றி, பொருளாதார வளர்ச்சிக்கும், கடல்வழி பாதுகாப்பிற்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பயணிகள் கப்பல், சுற்றுலாவை மேம்படுத்த திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக கொச்சி வரை செல்லும் படகு போக்குவரத்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து கூடுதலாக ரயில் சேவை வேண்டும்.

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஸ்டெர்லைட் போன்று மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். உப்பு, தீப்பெட்டி, பட்டாசு தொழில் வளர்ச்சி குறித்தும், மிளகாய் வத்தல் வணிகம் குறித்தும் திமுக அறிக்கையில் இடம்பெற வேண்டும் என மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் இன்று (செவ்வாய்) கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். இதில் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகளை கேட்கின்றனர். 7ம் தேதி மதுரையிலும், 8ம் தேதி தஞ்சாவூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

9ம் தேதி சேலத்திலும், 10ம் தேதி கோவையிலும் 11ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. வரும் 21, 22, 23ம் தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை கேட்கின்றனர்.

The post தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையிலான திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பணியை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK Parliamentary Election Manifesto Preparation Committee ,Kanimozhi ,Thoothukudi ,parliamentary election manifesto preparation committee ,DMK ,Deputy General Secretary ,Virudhunagar ,Ramanathapuram ,DMK Parliamentary Election Report Preparation Committee ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது